Wednesday, June 21, 2017

சான்றிதழ்கள் பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு

பொள்ளாச்சி தாலுகாவில், அரசின் ’இ - சேவை’ மையங்களின் சேவை முடங்கி விட்டது. 

ஒட்டுமொத்த தாலுகாவுக்கும், இரண்டு மையங்கள் மட்டுமே செயல்படுவதால், குறித்த நேரத்தில் சான்றிதழ்கள் பெற முடியாமல் மாணவர்களும், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

வருவாய்த்துறையால் வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, வருமான சான்று, ஜாதிச்சான்று, முதல்பட்டதாரி சான்று, பட்டா மாறுதல், கம்ப்யூட்டர் சிட்டா உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சான்றொப்பம் பெற்று, இறுதியில், தாலுகா அலுவலகத்திலுள்ள தகவல் மையத்தில் ஒப்படைத்து, ஒப்புகை சீட்டு பெற வேண்டும்.

சான்றிதழுக்கு ’சன்மானம்’

விண்ணப்பத்தில் கேட்டுள்ள சான்றிதழ் வழங்கப்படும் நாள் குறித்த அறிவிப்பு, ஒப்புகை சீட்டில் எழுதி கொடுக்கப்படும். குறிப்பிட்ட நாளில் சென்று நாள் முழுவதும் காத்திருந்தாலும் கைக்கு சான்றிதழ் வந்து சேராது. இன்று போய் நாளை வா… என்ற கதையாக அலைக்கழித்த பிறகு, சான்றிதழ் எடுத்துக் கொடுக்கும் ஊழியர்களுக்கு ’சன்மானம்’ கொடுத்தே சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுதவிர, ஒவ்வொரு அலுவலகத்தில், விண்ணப்பம் பரிந்துரை செய்வதற்கும், தாமதமின்றி தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவும் ’காணிக்கை’ கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கிராம நிர்வாக அலுவலகத்தில் இருக்கும் உதவியாளர்கள் விண்ணப்பதாரர்களிடம் பணம் வசூலித்து, சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது.

’இ - சேவை’ துவக்கம்

சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும், லஞ்ச லாவண்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அரசு சார்பில், தாலுகா அலுவலகங்களில் ’இ - சேவை’ மையங்கள் துவங்கப்பட்டன. ’தமிழ்நாடு கேபிள் கார்ப்பரேஷன்’ மூலமாக நடத்தப்படும் ’இ - சேவை’ மையத்தில், வருவாய் துறை சார்பில் வழங்கப்படும், 17 வகையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தல், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வினியோகம் உள்ளிட்ட பணிகள் ’இ - சேவை’ மையத்தில் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஒரு மாதமாக, ’ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால், பொள்ளாச்சி தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகத்திலுள்ள ’இ - சேவை’ மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, தினமும், 30 பேருக்கு டோக்கன் கொடுத்து, விண்ணப்பங்கள் பெறுவது, ஆவணங்கள் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முடக்கியது ’இ - சேவை’

பொது ’இ - சேவை’ மையங்களில் பணிகள் அதிகரிக்கப்பட்டதால், சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகாவுக்கு உட்பட்ட கூட்டுறவு வங்கிகள், பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு நிலவள வங்கிகளில், ’இ - சேவை’ மையம் துவங்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பணியாளர்களை நியமித்து, சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

விண்ணப்பத்துக்கு, 30 ரூபாய் என்ற கட்டண அடிப்படையில், கூட்டுறவு சங்கங்களில் ’இ - சேவை’ மையம் செயல்பட்டது. ஆனால், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நிதி ஒதுக்காததால், ’இ - சேவை’ திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டது. 

தற்போது, பொள்ளாச்சி தாலுகாவில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்பட்ட மையங்களில், 90 சதவீதம் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகத்திலுள்ள, ’இ - சேவை’ மையத்தில் குவித்து வருகின்றனர்.

அலைமோதும் கூட்டம்!

பள்ளிகள் திறப்பு, கல்லுாரி சேர்க்கை நேரத்தில், ’இ - சேவை’ முடங்கியதால், கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அதேபோன்று, ’ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு ஏராளமான பிழைகளுடன் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளதால், அதனை திருத்த பொதுமக்கள் அலைமோதுகின்றனர்.

வங்கி கணக்கு, அரசு உதவித்தொகை, மானியங்களுக்கு ஆதாரம் அடையாள அட்டை கட்டாயமாகி விட்டதால், இதுவரை ஆதாருக்கு போட்டோ எடுக்கவும் கூட்டமாக உள்ளது.

No comments:

Post a Comment