Thursday, September 28, 2017

சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி

தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் என 58 ஆயிரம் பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 600 பள்ளிகள் மட்டுமே இயங்கின.
இந்நிலையில் 'நீட்' தேர்வு, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு போன்றவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற விரும்புகின்றன. அதற்கு தமிழக அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.அதை வழங்குவதில் தமிழக அரசு தயக்கம் காட்டியது. அரசியல்வாதிகள் தலையீட்டில் பணம் கொடுத்து, இந்த சான்றிதழை பல பள்ளிகள் பெற்றன. தற்போது, 'நீட்' தேர்வுக்கு பின் நிலைமை மாறி விட்டது. சி.பி.எஸ்.இ.,க்கு மாறுதல் கேட்கும் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பேசி மிக வேகமாக சான்றிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஐந்து மாதங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற சான்றிதழ் பெற்றுள்ளன. அவற்றுக்கு வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., அந்தஸ்து கிடைக்கும். இன்னும், ஆயிரக்கணக்கான பள்ளிகள் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பித்து உள்ளன. கடந்த கல்வியாண்டில், 600ஆக இருந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இந்த கல்வியாண்டில் 800ஐ தாண்டி உள்ளன.

No comments:

Post a Comment