நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், அதையே எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டும்’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
’ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் (நீதித்துறை) மனு செய்திருந்தார்.
தலைமை நீதிபதி கொண்ட அமர்வு தானாக முன்வந்து 2016 டிச.,2 ல் மனுவை விசாரணைக்கு ஏற்றது. நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தாக்கல் செய்த பதில் மனு: தற்போது முப்பருவ தேர்வு முறை நடைமுறையில் உள்ளது; அது கற்பவர்களுக்கு எளிமையானது. அது பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியது. பாடத்திட்டம் பல்வேறு நிபுணர்கள் மூலம் உருவாக்கப்பட்டது.
மாநில, தேசிய மதிப்பீட்டு முறைகளை மேற்கொள்கிறோம். ஆடியோ, வீடியோ ’சிடி’கள் மூலம் கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஆங்கில வாசிப்புத் திறனை வளர்க்க, மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ’சிடி’கள் வழங்கப்பட்டுள்ளன.
வீடியோ மூலம் கற்பிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. நடுநிலை, மேல்நிலை வகுப்பு பாடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 400 பொருளடக்கங்கள் 10 லட்சம் ரூபாய் மதிப்பில், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆடியோ, வீடியோ மூலம் கற்பதில் குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர்.
ஆங்கில உச்சரிப்புகள் அடங்கிய ’சிடி’யை அரசு வெளியிட்டது. தொழில்நுட்பத்தை புகுத்தி கற்பிப்பதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. திட்ட அடிப்படையில் கற்பித்தல் மூலம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் பயனடைவர். இதற்காக ஆசிரியர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளிச் சீருடை, லேப்டாப் உட்பட 16 வகையான நல உதவிகளை மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது இதற்காக 2015--16 ல் 3,௦45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கண்ணப்பன் குறிப்பிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், ’சமச்சீர் கல்வியை மேம்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், அதையே எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment